காலாண்டுத் தேர்வு விடுமுறையின்போது மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி வகுப்புகள் நடத்தும்போது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அதற்குத் தலைமையாசிரியர்களே பொறுப்பேற்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வுகள் முடிவடைந்ததும், செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

விடுமுறைக் கால கற்றலுக்கு வழிகாட்டுதல்

விடுமுறை நாட்களில் மாணவர்கள் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்களுக்கான விடைகளை ஒப்படைப்புப் பணியாக எழுதி வருவதற்கு ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு பாடத்தைப் படிக்கும் வகையில் மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகளைப் பாட ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வை எதிர்கொள்ளவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், விடுமுறையிலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், 6 முதல் 9ஆம் வகுப்பு வரை கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் பயிற்சி பெறுவதற்கு அந்தந்தப் பாட ஆசிரியர்கள் ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறக்கும் நாளிலேயே விடைத்தாள்கள்

அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை அன்றைய தினமே மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்கான பணிகளை உரிய நேரத்தில் முடிக்க ஆசிரியர்களுக்குத் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் மற்றும் பாடக்குறிப்பேடுகள் விநியோகிக்கப்படும் நாளில், அவற்றைத் தலைமையாசிரியர்கள் பெற்றுப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளின் முதல் பாடவேளையிலேயே அனைத்து மாணவர்களுக்கும் அவற்றை வழங்கத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலப் பாதுகாப்பு குறித்த ஆலோசனை

விடுமுறை நாட்கள் மழைக்காலமாக இருப்பதால், மாணவர்களுக்குப் பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகளை வழங்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் இதுகுறித்து மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் எனத் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

சுற்றுலா அழைத்துச் செல்லவும் தடை

இதனிடையே, பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், காலாண்டு விடுமுறையின்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளையும் நடத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுமுறை நாட்களில் மாணவர்களைச் சுற்றுலா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை மீறி மாணவர்களை அழைத்துச் செல்லும்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.