ஆன்லைன் மருந்தகங்களின் வர்த்தக முறையைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் நாளை (புதன்கிழமை) மருந்துக் கடைகள் மூடப்பட உள்ள நிலையில், தமிழகத்திலும் இதற்குப் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது. மாநிலம் முழுவதும் நாளை 35,000 மருந்தகங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன.
போராட்டத்திற்கான பின்னணி என்ன?
இணையதளம் வழியாக (Online) மருந்துகளை அதீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்வதற்கு, அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாகத் தயாரிக்கப்படும் மருத்துவப் பரிந்துரைச் சீட்டுகளை (Prescriptions) அடிப்படையாகக் கொண்டு, ஆன்லைனில் மருந்துகள் தடையின்றி விநியோகிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது போன்ற ஆபத்தான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தக் கோரியே இந்தத் தேசிய அளவிலான அடையாளப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் என்ன தாக்கம் இருக்கும்?
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அசோக் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
"நாடு தழுவிய இந்த போராட்டத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள 35,000 மருந்துக் கடைகள் தங்களது முழு ஆதரவை வழங்கியுள்ளன. எனவே, நாளை இந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.
அவசரக் தேவைகளுக்கு மருந்துகள் கிடைக்குமா?
தமிழகம் முழுவதும் மொத்தம் சுமார் 40,000 மருந்துக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில், பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனை வளாகங்களுக்குள் இயங்கும் 5,000 மருந்தகங்கள் மட்டும் நாளை வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.